தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே களஞ்சியம் நகர் 2-வது தெருவில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. புருனேவுக்கு ஆட்கள் தேவை என அந்த நிறுவனம் பெயரில் விளம்பரமும் செய்யப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய பஸ் ஸ்டாண்டுகள், மக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதிகளில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது. இதனை பார்த்த ஏராளமான இளைஞர்கள் அந்த நிறுவனத்துக்கு வந்தனர்.
புருனே நாட்டில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், அங்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம். மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனக்கூறி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40 பேரிடம் இருந்து ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் மருத்துவச்சான்றை பெற்றுக்கொண்டதுடன், ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.40 ஆயிரம், 50 ஆயிரம் என வசதிக்கு ஏற்ப பணமும் வசூலித்து உள்ளனர்.
10 நாளில் உங்களுக்கான விசா வந்து விடும். அதைத்தொடர்ந்து நீங்கள் வெளிநாடு செல்லலாம். நாங்களே அழைத்து செல்வோம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என அனுப்பி உள்ளனர்.
இப்படியாக சுமார் 40 பேரிடம் இருந்து சுமார் ரூ. 9 லட்சம் வரை வசூலித்ததாக தெரிகிறது.அதன் பிறகு அந்த அலுவலகம் திறக்கப்படவே இல்லை. பணம் கொடுத்தவர்கள் வெளிநாடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு, பலமுறை அந்த நிறுவனத்திற்கு வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். ஆனால் அந்த டிராவல்ஸ் நிறுவனம் திறக்கப்படவே இல்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர்கள் தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராத்திடம் புகார் செய்தனர்.
இந்த புகார்களை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்த எஸ்.பி., உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி மோசடி செய்த 2 பேரை தேடி வந்தனர்.
தைலமறைவாக இருந்த அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த ராமன் மகன் ராம்குமார் (32), திருச்சி அடுத்த திருச்செந்துறையை சேர்ந்த முருகேசன் மகன் கணேசமூர்த்தி (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும், இதே போன்று வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.