கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ மாணவிகளிடையே உணர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமையையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு 24.04.2023 வரை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
இதன் 100-வது நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது என்றும் பாராட்டினார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பரப்புரைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்திமுடிக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்ப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமைந்துவருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற 11 கல்லூரிகளைச் சேர்ந்த 1300 மாணவ மாணவிகளுக்கும் ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, ’தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கதை” என்னும் பொருண்மையில் மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர்.ஜெ.ஜெயரஞ்சன் கருத்துகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்த திட்டக்குழுத் துணைத்தலைவ, தமிழ்நாடு அரசின் அயராத தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்விப் படித்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் நா.வெற்றிவேலன் நன்றியுரை வழங்கினார்.
தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டன. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
முன்னதாக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.