நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.
முந்தைய விசாரணையின் போது 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோடநாடு வழக்கில் முழு தகவல்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) ஊட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளனர். கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் கூடுதல் கால அவகாசம் கேட்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.