தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமகுண்டம் காவல் ஆணையகத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் பிரசாத். மஞ்சிரியாலாவை சேர்ந்த பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டல சிங்காரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கமலம்மா மருமகன் பிரசாத்திற்கு ரூ.4 லட்சம் பணம் தர வேண்டும். இந்த பணத்தை எப்போது கேட்டாலும் கமலம்மா அலைக்கழிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மஞ்சிரியாலாவில் இருந்து மனைவியுடன் குண்டல சிங்காரம் வந்த பிரசாத், தனது மாமியார் கமலம்மாவிடம் பணம் குறித்து கேட்டு கொண்டிருந்தபோது வார்த்தைகள் முத்தி தகாத வார்த்தைகளால் திட்டி
கமலம்மாவின் மார்பில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கமலம்மா உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கு நின்று வேடிக்கை பார்த்து கொண்டுருந்த காவலர் பிரசாத்தை கமலம்மா குடும்பத்தினர் கற்களால் தாக்கினர்.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரசாத்தை அங்கு வந்த போலீசார் மீட்டு வாரங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் பிரசாத் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.