தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதா, முறைகேடுகள் நடந்துள்ளளதா என்று மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது பலத்த காற்று வீச தொடங்கியதால், ட்ரோன் பறக்கவிட்டு அளவீடு செய்ய முடியாத நிலை இருந்ததால் சோதனையை பாதியில் ரத்து செய்து திரும்பினர்.
தொடர்ந்து, திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடக்கிறது.