13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் டில்லியில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆட்டத்தில் அசத்திய அஸ்வினை நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஒருவேளை அணியின் கலவைக்காக தேவைப்பட்டால் 2019 உலகக்கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷமி தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு; “அஸ்வின் என்ன தவறு செய்தார். இது கடினமான முடிவாக இருக்கும். ஆனால் இதை இத்தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் எடுத்திருக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் 2019 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முகமது ஷமி தேர்வு செய்யப்படுவார் என்று நான் நினைத்தேன். ஏனெனில் அந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அவர் வெற்றியை தலைகீழாக மாற்றினார். அவரை சேர்த்திருந்தால் அது எதிரணிக்கு மனதளவிலான அழுத்தத்தை கொடுப்பதுபோல் அமைந்திருக்கும். ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவருக்கு தற்போதைய ஆப்கானிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் இருந்திருந்தாலும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மறுபுறம் அணியின் நலனுக்காக அஸ்வின் இதுபோல் பலமுறை கழற்றி விடப்பட்டு வருகின்றார்” என்று கூறியுள்ளார்.