திருச்சி பொன்மலையடிவாரம் – ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும் பணி நடக்கிறது. இந்த சாலையின் நடுபகுதி சேதமின்றி நன்றாகவே இருந்தது. அதையும் உடைத்து சாலை முழுவதுமாக புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பணி தொடங்கப்பட்டதும் இந்த பகுதி மக்கள் மெத்த மகிழ்ச்சி அடைந்தனர். இனி சாலையில் குண்டும் குழியுமின்றி வாகனங்களில் நன்றாக செல்லலாம் என கருதினர்.
ஆனால் சாலையை உடைத்து, கொத்திப்போட்டு 15 நாட்கள் ஆகிவிட்டது. சாலையை உழுதுபோட்டது போல கிடக்கிறது. இப்போது இந்த பகுதி மக்கள் உள்ளதும் போச்சுடா என்ற நிலைக்கு ஆளாகி உள்ளனர். ஏற்கனவே 50 சதவீதம் மோசமான சாலையில், பயணித்தோம். இப்போது 100 சதவீதம் சாலையை சீரழித்து விட்டார்கள் என இந்த பகுதியில் பயணிப்போர் வேதனையுடன் கூறுகிறார்கள்.
இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் உள்ளனர். இந்த வழியாக நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் இந்த வழியாக செல்லவே முடியவில்லை. வாகனத்தின் டயர்களும் சேதமடைகிறது.
2 நாளில் முடிக்க வேண்டிய வேலையை 15 நாட்களுக்கு மேலே ஆகியும் வேலையை முடிக்காமல் அலட்சியமாக இருப்பதும், பொது மக்கள் அவதிப் படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வேதனையாக உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தி உள்ளது.