பொங்கல் தினத்தன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தைப்பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது. வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியை முன்னிட்டு, திரையரங்கில் ரசிகர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக விஜய் படம் வெளியாகும் நேரத்தில் ரசிகர்கள் காட்சிக்காக சிறப்பு கூப்பன்கள் விநியோகிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை திரையரங்கில் டிரெய்லர் வெளியீட்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக, கரூர் ரசிகர்கள் சிறப்பு கூப்பன்கள் அச்சிட்டுள்ளனர்.
கரூர், ராமானூர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி திரையரங்கில் வாரிசு திரைப்பட ட்ரெய்லரை கண்டு ரசிக்க திரைப்படக் காட்சி ஒன்றை ரத்து செய்துவிட்டு அதற்கான உரிய விலை கொடுத்து கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். 400 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் ட்ரெய்லர் காட்சிக்கான கூப்பன்கள் ரசிகர்களுக்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.