காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், அதைப்பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்தும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுகை , அரியலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெம் என விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் அதிமுக , பாஜக தவிர்த்த மற்ற கட்சிகளின் விவசாய சங்கங்கள் அறிவித்தது. வணிகர் சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன.
அதன்படி இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், வணிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு
தெரிவித்துள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு தொடங்கிய கடையடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆங்காங்கே மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள், பொதுமக்கள், வணிகர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. அதே நேரத்தில் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.