சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000 கீழ் உள்ள தொகை தள்ளுபடி செய்யப்படுவதால் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள். ரூ.10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் போதும். வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர்.
வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தால் வணிகர்கள், வணிகவரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும். பழைய நிலுவைத் தொகையை வசூலிக்க சமாதான திட்டத்தை கொண்டுவருகிறோம். வணிகர்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதில் 4 வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல்முறை. வரும் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டம், பிப்.15 2024 வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.