மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டு கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. பழமை வாய்ந்த புனிதமான இந்த பொருட்களை அரசு கையகப்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கூட்டம் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது ராஜ கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சீர்காழி தமிழ்ச் சங்கம் திருக்கோயில் திருமணங்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் தர்மபுரம் ஆதீன பொது மேலாளர், சீர்காழி சட்டநாதர் ஆலய கண்காணிப்பாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேசினர். அரசு புனித சிலைகள் மற்றும் செப்பேடுகளை கையகப்படுத்தக் கூடாது என்றும் இவை அனைத்தும் ஆலய வளாகத்திற்குள் கிடைத்த
காரணத்தால் ஆலயத்திற்குள்ளேயே பாதுகாப்பு பெட்டகம் வைத்து பொதுமக்கள் வழிபடுவதற்கும் சீர்காழி வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு பெட்டகம் அமைப்பதற்கு உண்டான செலவுத் தொகையை தருமபுரம் ஆதீனமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் கோயில் அருகிலேயே கண்டெடுக்கப்படும் சிலைகளை பல்வேறு இடங்களில் கோயிலுக்கே வழங்கியதன் ஆவணங்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.