காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து விட்டது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 40 சதவீதத்திற்கு மேல் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டது. அடுத்தமாதம் நடவு செய்ய வேண்டிய சம்பா , தாளடி பயிர்கள் முற்றிலும் கைவிடப்படும் பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.
காவிரியில் உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடக்கோரி தமிழக அரசு காவிரி ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் விவசாயம் மட்டுமல்ல, குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காவிரி டெல்டா பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நாளை டெல்டா மாவட்டங்களில்(திருச்சி, தஞ்சை, நாகை, , திருவாரூர், புதுகை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள்) மறியல் போர், மற்றும் கடையடைப்பு நடக்கிறது. இதில் அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் பாஜக, அதிமுக தவிர அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கிறது.
திருச்சியில் நாளை தலைமை தபால் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் இந்திரஜித் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தரும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.