சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ௹ 300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும். விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப் பட்ட பயிர்க் கடன் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழுத் தொகை மற்றும் 5 ஏ பிரைஸ் முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெட்டுக் கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது.
கடந்த 30 ந் தேதி முதல் நடைப் பெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் எலியை வாயில் கவ்வியபடியும், தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டும், வாயில் கறுப்பு துணி கட்டிக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும், கோவணம் அணிந்து மண்சட்டி ஏந்தி பிச்சை எடுத்தும், எருமை மாட்டிடம் மனு கொடுத்தும், தண்டோரா அடித்தும், ஒற்றை காலில் நின்றப்படியும், காதில் பூச் சுற்றிக் கொண்டும், சங்கு ஊதியும், கருப்பு துணி கண்ணில் கட்டிக் கொண்டும், மொட்டை அடித்துக் கொண்டும், காதை பொத்திக் கொண்டும், கரும்பை கையிலேந்தியும், கறுப்பு கொடி ஏந்தியும், கைகளை கட்டிக் கொண்டும், மெழுகு வர்த்தி ஏந்தியும், தினம் தினம் நூதன முறையில் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று கரும்பு மாலை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் காசிநாதன், ஆலை மட்ட செயலர் முருகேசன், சரபோஜி உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.