அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுமார் 30 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தயாரித்த வைத்திருந்த நாட்டு வெடிகள் பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால் குடோன் தீப்பற்றி எரிந்தது. பலர் தப்பி வெளியே ஓடிவிட்டனர். 15 பேர் மட்டும் உள்ளே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தும் அடுத்தடுத்து வெடித்து பயங்கர சத்தத்துடன் தீ பிழம்பு வெளியே கிளம்பியது. இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். வாணவெடிகள் பயங்கரத்துடன் வெடித்ததால் அருகில் எவராலும் நெருங்க முடியவில்லை.
கீழப்பழூர் போலீசார் ,அரியலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை கட்டுப்படுத்த வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடினர். முதலில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் விபத்து நடந்த இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி சொர்ணா வந்து விசாரணை நடத்தினார். எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லாவும் வந்து விசாரணை நடத்தினார். சிறிது நேரத்தில் மேலும் 4 சடலங்கள் மீட்கப்பட்டது. இவர்களில் ஒருவர் பெண். இந்த பெண் உள்பட 3 பேரின் உடல்கள் வெடித்து சிதறியது. உடல் பாகங்கள் தனித்தனியாக சிதறி கிடந்தது. பெண்ணின் தலை சிதறி 200 மீட்டர் தூரத்தில் தூக்கிய எறியப்பட்டு கிடந்தது. இதுபோல பலரது உடல் பாகங்கள் ஆங்காங்கே கை, கால், முகம் என சிதறி கிடந்த கோர காட்சிகளையும் காண முடிந்தது. இதனால் இறந்தவர்கள் 5 பேர் தானா, அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்களா என தெரியவில்லை . இதற்கிடையே 7 பேர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 6பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இது தவிர பட்டாசு குடோனில் நிறுத்தியிருந்த 9 பைக்குகள், ஒரு வேன், ஒரு டிராக்டரும் எரிந்து போனது. வெடிக்காத நாட்டு வெடிகளும் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் அந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பதற்காக சிவகாசியில் இருந்து 10 பேர் அழைத்து வரப்பட்டனர். மற்றவர்கள் உள்ளூர் தொழிலாளர்கள். இறந்தவர்கள் யார், எந்த ஊர் என தெரியவில்லை. அதே நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டபோது சிவகாசி தொழிலாளர்கள் சாப்பிட சென்று விட்டதாகவும், இதனால் அவர்கள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி மற்றும் விசாரணை நடக்கிறது.
நேற்று ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில்1 4 பேர் இறந்த நிலையில் இன்று அரியலூரில் பட்டாகு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பலர் இறந்துள்ளனர்.