தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் படித்து கூட்டத்ைத தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் இரங்கல் குறிப்பு வாசித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். சட்டசபைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சட்டசவை நிகழ்ச்சிகளை காண ஆஸ்திரேலிய நாடாளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக் உள்பட 14 முக்கிய பிரமுகர்கள் தமிழக சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். அவர்களை சபாநாயகர் வரவேற்றார்.
முன்னதாக காலை 9.30 மணிக்கு எடப்பாடி தலைமையில் தலைமைச்செயலகம் வந்த அதிமுக உறுப்பினர்கள், அங்குள்ள எதிர்க்கட்சிதலைவர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் வேலுமணி, கே.பி. முனுசாமி, உதயக்குமார் ஆகியோர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சித்துணைத்தலைவர் இடத்தை உதயக்குமாருக்கு வழங்க வேண்டும், ஓ. பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருக்கான இடத்தை மாற்ற வேண்டும் என கூறினர். எனவே சபையில் இன்று காரசார விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.