தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.டி. படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த சுஜிர்தா, நேற்று முன்தினம் கல்லூரிக்கு வரவில்லை. சக மாணவிகள் விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது, சுஜிர்தா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். கல்லூரி தரப்பு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த குலசேகரம் போலீசா சுஜிர்தாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதற்கிடையில், மாணவியின் தந்தை சிவக்குமார், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் மற்றும் போலீஸார் கல்லூரி விடுதியில் நடத்திய சோதனையில், சுஜிர்தா ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், ஒரு பெண் பேராசிரியை உட்பட 3 பேராசிரியர்கள் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு பேராசிரியர் மனதளவிலும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 3 பேராசிரியர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறுகையில் மாணவியின் தற்கொலை குறித்து 3 கோணங்களில் விசாரணை நடக்கிறது. அவருக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்பதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.எனினும், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பேராசிரியர், மாணவி சுஜிர்தாவிடம் செல்போனில் பேசியதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதேநேரம், சென்னையில் உள்ள ஒருவரிடம், மாணவி அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். மாணவி தற்கொலை சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..
- by Authour
