மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பிரக்யான் நிகழ்வின் ஒரு பகுதியாக அம்ரித்தால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என் ஐ டி இயக்குனர் அகிலா தலைமை வைத்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி என்ஐடி கல்லூரியின் முன்னாள் மாணவரும், சந்திராயன் 3 திட்ட இயக்குனருமான இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவர்களிடையே சந்திராயன் 3 திட்டத்தில் தொடக்கம் முதல் லேண்டர் நிலவில் தடம் பதித்தது வரை செயல்பாடுகள், இயக்கங்கள் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வீரமுத்துவேல் பதில் அளித்தார்.
பின்னர் மாணவர்களிடம் பேசும் பொழுது, நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவது என்பது அடுத்தடுத்த கோள்களுக்கு நாம் செயற்கைகோள் அனுப்பவதற்கான ஒருவழியாகும். மேலும் இந்த சந்திராயன் 3 திட்டத்தின் திட்ட இயக்குனர் பொறுப்பு அளித்த பொழுது சற்று பயமாகத்தான் இருந்தது. பின்னர் அனைத்து துறை
ஒத்துழைப்புடன் செயலாற்றினோம். இஸ்ரோவை பொறுத்தவரை தனிநபரின் முடிவுகளுக்கு இடமில்லை. ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால் அது அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் கருத்து கேட்ட பிறகு அதில் எது சிறந்ததோ அதையே செயல்படுத்துவோம். நிலவுக்கு செயற்கை கோள்கள் அனுப்புவது என்பது மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல, நம்முடைய விண்வெளி குறித்த ஆய்வினை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எந்த ஒரு திட்டத்தை செய்யும் போது மிகுந்த ஈடுபாடு, ஆர்வம் இருந்தால் அது சோர்வை தராது, விடாமுயற்சியுடன் செய்தால் அவை நமக்கு வெற்றியை தரும் என்றார். இந்நிகழ்வில் என் ஐ டி கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.