மணல் குவாரிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் குவாரிகளை நடந்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் ராமச்சந்திரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது ராமச்சந்திரன் தலைமறைவாக உள்ளார். ஆனால் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியும் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து கிராவல் மண்ணை அள்ளி வரும் புதுக்கோட்டை பிரமுகர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஊர்மக்கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் .. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, புனல்குளம் கிராமத்தில் வசிக்கும் பழனிமாணிக்கம் மகன் சண்முகம் (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்பவர் மஞ்சபேட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட புனல்குளம், அரியாணிப்பட்டி மற்றும் மஞ்சபேட்டை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் அனுமதியே இல்லாமல் கிராவல் மண்ணை எடுத்து வருகிறார். கிராம மக்கள் கேட்ாடல் தன்னிடம் அனுமதி இருப்பதாக கூறி மிரட்டுகிறார். சண்முகத்திற்கு அனுமதி இருக்கிறதா? என புதுக்கோட்டை கனிமவள உதவி இயக்குனரிடம் கேட்டதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டும் அவர் பதில் அளிக்கவில்லை.
சண்முகம் தரப்பினர் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் இதுநாள் வரை கிராவல் மண்ணை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்து கீழே குறிப்பிட்ட டிப்பர் லாரிகளில், தஞ்சாவூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு முறையாக அனுமதிச்சீட்டு இல்லாமல், போலி அனுமதிச்சிட்டு பயன்படுத்தி மாநில/மத்திய அரசுகளுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தியதுடன், ஆழமான பள்ளங்களை ஏற்படுத்தி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதில் வேதனை என்னவென்றால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை பள்ளத்தில் நிரப்புவதற்கும் சண்முகம் தரப்பு வழிவகித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடுவதுடன் மட்டுமல்லாமல் விஷத்தன்மையும் பெறுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் கிராம மக்கள் சார்பாக அனுப்பபட்டும் கண்டு கொள்ளவில்லை. நான் எஸ் ஆர் ஆளு என்னை எந்த அதிகாரிகளும் கண்டுக்க மாட்டாங்கனு தைரியமாக சண்முகம் கூறி வருகிறார். கடந்த 12.09.2023.ம் தேதி மத்திய அமலாக்கத்துறை எஸ் ஆர் தரப்பினரிடம் சோதனை நடத்திய போது சண்முகத்தின் குவாரியிலும் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தினர். சோதனை நடத்தி 3 நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் சண்முகம் கிராவல் அள்ளத்துவங்கி விட்டார். சட்டத்திற்கு விரோதமாக கிராவல் குவாரிகளை நடத்தி வரும் நபர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்..