தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வங்கிக் கணக்கில் இருந்து, நண்பருக்கு G-pay மூலம் ரூ.1,000 அனுப்பி உள்ளார். ஆனால், அந்த பணம் நண்பரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படாமல், கணேசனின் வங்கிக் கணக்குக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது செல்போனுக்கு வந்த SMS ல் இருப்புத் தொகை ரூ.756 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து கணேசன் அதிர்ச்சி அடைந்தார். நேற்று காலை வங்கிக் கிளைக்கு சென்று, இதுபற்றி தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்கள் இதுகுறித்து விசாரித்து தெரிவிப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். சற்று நேரம் கழித்து வங்கிக் கணக்கில் இருப்புத் தொகையை சரிபார்த்தபோது, ரூ.756 கோடி என காட்டாமல், அவரது சேமிப்புத் தொகையை மட்டும் காட்டியது. இதையடுத்து அவர் நிம்மதியடைந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.