உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பஹர் ஜமான் – இமாம் களமிறங்கினர். 3 பவுண்டரிகள் விளாசிய பஹர் ஜமான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னிலும், இமாம் 15 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்த ரிஸ்வான் – சவுத் சகில் ஜோடி சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு பக்கம் ரிஸ்வான் பொறுமையாக விளையாட, மறுபக்கம் சவுத் சகில் அதிரடியாக விளையாடினார்.
சவுத் சகில் 32 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சவுத் சகில் 52 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ரிஸ்வானும் 68 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 188 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. அதனையடுத்து நவாஸ் – சதாப்கான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சதாப்கான் 32 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹசன் அலி வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது.