தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திக சார்பில் இன்று (6ம் தேதி) மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு விழா,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் திக தலைவர் வீரமணி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விழாவுக்கு வீரமணி தலைமை தாங்குகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கார் மூலம் தஞ்சை செல்கிறார். விழா முடிந்ததும் திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.
பாதுகாப்பு காரணம் கருதி முதல்வர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.