பொங்கல் திருநாளையொட்டி அனைத்து ரேசன் கார்டுதார்களுக்கும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை உள்ளூர் விவசாயிகளிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஒரு கரும்புக்கு ரூ.33 வழங்கலாம் என அரசு உத்தரவிட்டு உள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பொறுப்பு என்றும் அரசு கூறி உள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் கரும்பு வழங்குவதற்கான பணிகளை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் இன்று தொடங்கினார். அவர் இன்று திருவானைக்காவல் அடுத்த திருவளர்ச்சோலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை பார்வையிட்டார். கரும்பு நல்ல தரத்துடன் இருப்பதை பார்த்து விவசாயிகளிடம் பேசினார். ஆனால் இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
ஓரிரு நாளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கரும்பு கொள்முதல் செய்யப்படும் என தெரிகிறது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மல்லிகா, வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், உதவி இணை இயக்குர் பரிதாபேகம், அந்தநல்லூர் வேளாண் அலுவலர் மருததுரை, உதவி அலுவலர் கார்த்தி ஆகியோரும் கலெக்டருடன் சென்று கரும்பு வயல்களை பார்வையிட்டனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் 200 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யும் அளவுக்கு திருச்சி மாவட்டத்தில் கரும்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.