பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். இதில் திமுக உறுப்பினர் விஜயன் பேசும் போது பள்ளி மாணவர்களையும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்துகின்ற நாய்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த வேண்டும். மழைக் காலம் தொடங்குவதையொட்டி அனைத்து நீர் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். டெங்கு பரவலைத் தடுக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அ.ம.மு.க உறுப்பினர் சரவண பாபு பேசும் போது மேல கபிஸ்தலத்தில் பேருந்து நிழற் குடையை குடி நீர் வசதியுடன் ஏற்படுத்த வேண்டும். சருக்கை- பெருமாள் கோயில் இடையிலான அரசலாற்றின் குறுக்கே உள்ள நடை பாலம் சேதமடைந்துள்ளதால், புதிதாக கட்ட வேண்டும். சருக்கையிலுள்ள சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும். இதில் உறுப்பினர் சுரேஷ் உட்பட உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர். அரங்கத்திலுள்ள கடிகாரம் ஓட வில்லை. அதைக் கூட வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் கவனிக்கவில்லை.