அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2021 மே 7-ம் தேதி இந்த அரசுபொறுப்பேற்றது முதல் 2023 மே 31-ம்தேதிவரை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 13.80 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 11.82 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.914.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில், பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி,திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரியத்தில் தற்போது 1.74 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த வாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கவும், சுயதொழில் வாய்ப்பை உருவாக்கவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், 500 பெண்ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1லட்சம் மானியமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக மானியத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். சென்னை தீவுத்திடலில் பெண் ஓட்டுநர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் 150 பேருக்கு , 1 லட்சம் மானியத்தில் புதிய ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, ஆகியோர் உடனிருந்தனர். பெண்கள் கூறியதாவது… எங்கள் வாழ்க்கை தரம் மாறும் என நம்புகிறோம். மானிய விலையில் ஆட்டோ வழங்கியது பெண்களாகிய எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என முதல்வர் ஸ்டாலினை பாராட்டினர்.