மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையமானது கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவக் படிப்புக்கான புதிய விதிமுறையானது மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், இந்த விதிகளை தாண்டி கூடுதலாக மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால், இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட விதிகளின் படி மக்கள் தொகை கணக்கீட்டின் அளவீட்டில் அதிக அளவிலான மருத்துவ இடங்கள் தமிழகத்தில் உள்ளன. இதனால் நமது மாநிலத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் , புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதில் இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும்.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி, இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.
புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கை குறித்து, கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட கண்டன அறிக்கையின் படி, 10 ஆண்டுகளுக்கு முன்னர், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021-ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகை கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாத சூழல் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.