விருப்பமில்லா தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாய கருவிகளை வாங்கி அதனை வாடகைக்கு விட வற்புறுத்தும் கூட்டுறவுத் துறையை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இன்று முதல் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்,டிராக்டர், குபேட்டா உள்ளிட்ட பயனற்ற வேளாண் இயந்திரங்களின் சாவியை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் இயந்திரம் மற்றும் உபகரணங்களின் சாவியை கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர் அருளரசுசிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
ஐ சி டி வி, அக்ரோ சர்வீஸ் மற்றும் அக்ரி கிளினிக் மூலம் கொள்முதல் செய்த டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்கள், டெக்னீசியன் இல்லாமல் பயனற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் சங்கங்கள் கடுமையான நட்டத்தையும், பணியாளர்கள் மன உளைச்சலையும் சந்தித்து வருவதாகவும், எனவே இதுபோன்று திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ள அவர்கள், இதனால் விவசாய கடன் வழங்கும் பணி, நகை கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் செய்யும் பணிகள் அனைத்தும் பாதிப்படையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.