மகா போதி பௌத்த சங்கத்தின் சார்பில் அசோகர் அம்பேத்கர் தம்ம யாத்திரை(அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தம்ப அணிவகுப்பு) கேரளாவில் மாவலிக்கரை என்ற இடத்திலிருந்து கடந்த மாத 30ம் தேதி புறப்பட்டு இம்மாதம் 22ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு யாத்திரை செல்கிறது.
தமிழகத்தில் கன்னியாகுமாரி, மதுரை வழியாக யாத்திரை இன்று திருச்சி வந்தடைந்தது.
யாத்திரை குழுவினரை திருச்சி மாநகர மாவட்ட மேற்கு மாவட்ட விசிக செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் வரவேற்றனர். திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை சென்றடைந்தது.
தொடர்ந்து முற்போக்கு மாணவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்த பிக்குகள் வினயரக்கிட்த்தா மகாதேரோ, மருத்துவர் சுமேதோ தேரோ, மௌரியா புத்தர், மற்றும் மகா போதி பௌத்த சங்கத்தின் நிறுவனர் முனைவர் பாரதி பிரபு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.தம்ம யாத்திரையின் லட்சியம் மற்றும் நோக்கம் குறித்து பேசினர்.
தொடர்ந்து அம்பேத்கர் எழுதிய the unique model of the Buddha and his Dhamma புத்தகத்தை ஜான்பால் பல் சுவைஉரையாடல் மன்றத்தின் அருட்தந்தை சார்லஸ் வெளியிட மக்கள் மறுமலர்ச்சி தடத்தின் நிறுவனரும் முன்னாள் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினருமான மருத்துவர் ராஜ் வர்த்தனன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் திருச்சியில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை திருச்சி காவேரி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பெரம்பலூர் சென்றது.
கேரளாவில் இருந்து புறப்பட்ட இந்த ரதயாத்திரை பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களை கடந்து மகாராஷ்டிராவில் நாக்பூர் சென்றடைய உள்ளது.