திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையம் அருகே ஒரு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் காய்கனி மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்வார்கள். இந்நிலையில் சில நேரங்களில் மற்ற பயணிகள் ரெயில்கள் வரும் போது சரக்கு ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். அவ்வாறு ரெயில் நிறுத்தி வைக்கப்படும் போது ரெயில்வே கேட்டை கடந்து ரெயில் நிற்கும். அந்த நேரத்தில் சிலர் ரெயிலுக்கு அடியில் படுத்துக் கொண்டு ரெயிலை கடந்து செல்வார்கள். அதே போல் இன்று நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் அடியில் மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றார். அப்போது
ரெயில் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே பணியில் இருந்த ரெயில்வே கேட் கீப்பர் உடனடியாக ரெயில் இயக்குபவர்களின் கவனத்திற்கு பெண் அடியில் சிக்கி இருப்பதை தெரிவித்தார். சிறிது நேரத்தில் ரெயில் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. ரெயில் சென்று கொண்டிருந்த போது அந்த மூதாட்டியை அப்படியே படுத்திருக்கும் படி அங்கிருந்தவர்கள் கூறுவதும் ஓடும் ரெயிலுக்கு அடியில் மூதாட்டி சிக்கி இருப்பதோடு ரெயில் நின்றதும் அந்த மூதாட்டி வெளியே வரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.