மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியினால், நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மத்தியகிழக்கு அரபிக்கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது, வங்காள விரிகுடா, வடக்கு அந்தமான் கடல், அரக்கன் கடற்கரை மற்றும் மார்டபான் வளைகுடா ஆகிய பகுதிகளில் மிகத் தீவிரமான வெப்பச்சலனத்துடன் கூடிய வானிலை நிலவி வருகிறது.
இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.