திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் 38 வயதான செந்தில்குமார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சியில் உள்ள மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகின்றார்.இவர் தனது அலுவலக பணி நிமித்தமாக கடந்த 25 ந்தேதி கோயமுத்தூருக்கு சென்று விட்டார். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் கடந்த 27 ந்தேதி மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அரியலூரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை,வெள்ளி,பணத்தை திருடிச் சென்றனர்.
இந்நிலையில் கோயமுத்தூருக்கு சென்ற செந்தில்குமார் தனது பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்க்கு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை,வெள்ளிக் கொலுசு 2 ஜோடி,ஒரு வெள்ளிக் கிண்ணம்,ரூ.1000 பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து செந்தில்குமார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டுப் போனது குறித்து விசாரணை செய்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, வெள்ளி, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.