Skip to content

காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலி தொழிலாளி செல்லமுத்து(65) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ பொருள் ஒன்று தட்டுப்பட்டுள்ளது.
அதனை எடுத்த பார்த்தபோது கலை நயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கொண்ட காளி சிலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்லமுத்து அந்த சிலையை பத்திரமாக எடுத்து வந்து உமையாள்புரத்தை சேர்ந்த

மணி என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர் சிலை கிடைத்துள்ள விபரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் யமுனாவிடம் கூறியுள்ளார். இது பற்றிய தகவலை கிராம நிர்வாக அலுவலர் யமுனா முசிறி வட்டாட்சியருக்கு தெரிவித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தார்.காளி சிலை கிடைத்தது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,மற்றும் முசிறி கோட்டாட்சியர் ராஜன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை 22 சென்டிமீட்டர் உயரமும், 1.620 கிலோ கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. 10 கரங்களுடன் கழுத்தில் கபால மாலை அணிந்தும், கரங்களில் சக்கரம், அருவாள், சூலம், கதாயுதம், கேடயம், வில்,ரத்தம் ஏந்தும் சட்டி, சங்கு ஆகியவை ஏந்தியவாறு வலது காலில் ருத்திரனை மிதித்தவாறு
,தலையில் மகுடம் சூடியும், விரித்த தலைமுடியுடன் பீடத்தின் மீது நின்றகோலத்தில் கலை நயம் மிக்க படைப்பாக காளி சிலை காணப்படுகிறது.
இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொற்கொல்லர் ஒருவர் அழைத்து வரப்பட்டு சிலை சோதிக்கப்பட்டது. சோதனையில் அச்சிலை ஐம்பொன் சிலை என்பது முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து காளி சிலை பத்திரமாக பெட்டியில் வைத்து சீல் இடப்பட்டு முசிறி சார்நிலை கருவூல காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இச்சிலையை
காவிரி ஆற்றில் வீசியது யார்?எங்கேனும் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலையை கல்வர்கள் வீசி எறிந்தனரா என பல்வேறு கோணங்களில் முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக காளி சிலை காவிரி ஆற்றில் கிடைத்த தகவல் அறிந்து அங்கு கூடிய ஏராளமான பொதுமக்கள் காளி சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும் பொட்டு வைத்தும் பூச்சூடியும் வணங்கி வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *