நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழைக் காலம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். இந்த நிலையில், மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.