கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி டிஎஸ்பி தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கொலை நடத்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை பார்த்ததில் சந்தேகத்தின் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதியை சேர்ந்த கணவன், மனைவியான கதிர்வேல் – நித்யா ஆகிய இருவரையும் இன்று காலை சுமார் 8 மணி அளவில் கைது செய்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நித்யாவும், ரூபாவும் கரூர் பகுதியில் வீட்டு வேலை செய்வதற்காக ஒரே பேருந்தில் வரும்போது வழக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபா நகைகள் அணிந்து பகட்டாக இருப்பதை
பார்த்து, கணவர் கதிர்வேலிடம் நித்யா தெரிவித்துள்ளார். சதித் திட்டம் தீட்டிய நித்யா பவுத்திரம் பகுதியில் வீட்டு வேலை இருப்பதாக கூறி, ரூபாவை அப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவர் கதிர்வேலை வரவழைத்து அடித்து கொலை செய்துள்ளனர். மேலும், ரூபா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் நகைகளை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றம் அழைத்துச் சென்று இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெண் கவுன்சிலரை கொலை செய்த கணவன் மனைவி இருவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்த காவலர்களை எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.