காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. நாங்கள் ஏற்கனவே எங்கள் வழக்கறிஞர்களுடன் பேசியுள்ளோம். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடருவோம். கர்நாடகா அணைகளில் தமிழகத்திற்கு வழங்க தண்ணீர் இல்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.