நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் உள்ள பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெரம்பலூருக்கு வந்த சீமானுக்கு பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த சீமான் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். தொடர்ந்து கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற உதயநிதி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். சனாதனத்தை ஒழிப்பதற்கு, உதயநிதியோ, ஸ்டாலினோ, தி.மு.கவினரோ முன்வர வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு சாமானிய மக்களும் சனாதனத்தை ஒழிக்க பாடுபட வேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. உலகத்திலேயே மிக உயர்ந்தவன் அனைவருக்கும் நமக்கு சோறு போடக்கூடிய உழவன் தான் என்று தெரிவித்தார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தற்பொழுது பேசும் திமுக கடந்த 75 ஆண்டுகளாக அரசியலிலும் ஆட்சியிலும் இருந்துள்ளது. அப்பொழுது ஏன் சனாதனத்தை ஒழிக்கவில்லை. மத்திய அரசிலும் மத்திய அரசிலும் அங்கம் வகித்துள்ளது. அப்பொழுதெல்லாம் சனாதனத்தை ஒழிப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யாமல் தற்பொழுது பேசுவது,ஏமாற்று வேலை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிமுகவில் ஜெயலலிதா நல்ல பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார். அது போன்று ஏதாவது திமுக செய்திருக்கிறதா என்றால் இல்லை. அதேபோல காமராஜர், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார். ஆனால் திமுக அதுபோல எதுவும் செய்யவில்லை என்றார். தொடர்ந்து பேசிய சீமான், நாங்கள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை, அதிமுக பாஜகவில் இருந்து வெளியேறினால் அதனை நாங்கள் வரவேற்கிறோம், அதேபோல திமுகவும் காங்கிரசை வேண்டாம் என்று முடிவு எடுத்தால் அதனையும் நாங்கள் வரவேற்போம். காரணம் என்னவென்றால் மத்தியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எந்த மாநிலத்திற்கும் தேவை இல்லை. மாநில தன்னாட்சி மற்றும் மாநில உரிமைக்கு இந்த இருகட்சிகள் தடையாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும் ஒரே கொள்கை, ஒரே கோட்பாடுகளைக் கொண்டவர்கள். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் மொழிக்காக எந்த விதமான நல்லதையும் செய்யவில்லை, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க முன்வரவில்லை. குறைந்தபட்சம் வானூர்தியில் கூட அறிவிப்புகள் செய்வதில்லை. நமது வாக்குகளையும், வளங்களையும் பெற துடிக்கும் மத்தியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
கர்நாடக விஷயத்தில் தேசியக் கட்சியாக இருந்தாலும் அங்கு வெற்றி பெறுகின்ற போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாநில கட்சிகளாக மாறி விடுகின்றன. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறும் கர்நாடக அரசு, நெய்வேலி மின்சாரத்தையும் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் பெட்ரோலையும் வேண்டாம் என்று சொல்லுமா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பாஜக, அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில் அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே உரசல் நீடித்துக் கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் அண்ணாமலையை மாற்றச் சொல்லி பாஜக தலைமையை வற்புறுத்தலாம் மாற்றுவதற்கும் வாய்ப்பும் உள்ளது இதற்கு ஆருடம் சொல்ல முடியாது என்றார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை தராத கர்நாடக அரசின் செயல்பாட்டினால் தஞ்சாவூரில் ஒரு விவசாயி மாரடைப்பினால் உயிரிழந்திருக்கிறார். இந்த நிலையில் அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக கர்நாடகாவில் திமுகவினர் வேலை செய்தது எந்த விதத்தில் நியாயம் என்றார். கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பொழுது பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அந்த மண்ணின் மக்களின் உரிமைக்காக நிற்கிறார்கள். ஆனால் தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக நமது மக்களுக்காக எதையும் செய்யவில்லை . உண்மையாக இல்லை. அவர்களுக்க துணை போகிறார்கள், மேலும் தமிழகத்திற்கு தரவேண்டிய நீர் பங்கீட்டை தராமல், கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது தொகுதி பங்கீடு கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்று
என்றும், இவர்களோடு கூட்டணி இல்லை என்று திமுக அறிவிக்குமா என்றும் தெரிவித்தார். அனைத்து பிரச்சனைகளுக்கும் நீதிமன்றத்திற்கு சென்று நாம் தீர்வு பெற வேண்டி உள்ளது அப்படி என்றால் சட்டமன்றம் நாடாளுமன்றம் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை அதிமுகஆட்சியின் பொழுது அனைத்து கட்சி கூட்டம் போடப்பட்டு எங்களை அழைத்தார்கள். ஆனால் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்களை ஒரு கட்சியாகவே மதிப்பதில்லை. எங்களுக்கு 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இருப்பினும் எங்களை அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை என்றார். மேலும் அதிகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுகவிற்கு அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்றும் அவர் பேசினார். உரிமைத்தொகை என்பது தேர்தல்களில் ஓட்டுக்காக கொடுக்கப்படும் தொகை. இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்து ஆயிரம் ரூபாய்க்கு தமிழக பெண்களை கையேந்த வைத்திருப்பது மிகவும் அவலத்திற்குரியது. மேலும் இந்த தொகை வழங்குவதற்கு கலைஞரின் பெயரை வைத்திருப்பது ஏற்புடையதல்ல. பொதுமக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் தொகைக்கு கலைஞரின் பெயரை ஏன் வைக்க வேண்டும். இதுபோல பல்வேறு திட்டங்களுக்கு கலைஞரின் பெயரை வைத்துள்ளார்கள் கலைஞரின் பெயரை வைப்பதற்கு ஒரே இடம் டாஸ்மாக் தான் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். கூட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.