Skip to content
Home » இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

  • by Senthil

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ள பாஜகவும் தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து பேசி வருகிறது. அவ்வாறு கடந்த 14-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை, கூட்டணி தர்மத்தை மீறி விமர்சித்து வருவதாக கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. தொடர்ந்து, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசி இருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணிஷ. நத்தம் விஷ்வநாதன் உள்ளிட்டோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது தொடர்ந்து அதிமுக தலைவர்களை பாஜக தொடர்ந்து விமர்சித்து வருவதால்  இன்று முதல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளாது என இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தனர். இதனைதொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!