திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெறுவது வழக்கம். இம்முகாமில் பொதுமக்கள் மின்சாரம் ,பட்டா மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக வாரந்தோறும் சுமார் 250 பேர் கலெக்டரிடம் மனு அளித்து தங்கள் பிரச்னைகளுக்கு நிவாரணம், தீர்வு தேடிக்கொள்வார்கள்.
கடந்த வாரம் திங்கள் கிழமை விநாயகா் சதுர்த்தி, அரசு விடுமுறை என்பதால் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற வில்லை. அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு இன்று வழக்கத்தை விட அதிகமான மக்கள் வந்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்பட சுமார் 600 பேர் வந்திருப்பார்கள்.
வழக்கத்துக்கு மாறாக கூட்டம் வந்த நிலையில் மக்கள் குறைதீர் பிரிவில் பதிவு செய்யும் இடத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் பழுதானது. இதனால் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் கைகளில் எழுதி என்ட்ரி சீட்டு கொடுத்தனர். இதனால் தாமதமானது. அதே நேரத்தில் கம்ப்யூட்டர்கள் சீர்செய்யும் பணியும் நடந்தது.