Skip to content
Home » ஆஸியுடன் ஒன்டே தொடரை வென்றது இந்தியா

ஆஸியுடன் ஒன்டே தொடரை வென்றது இந்தியா

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்சுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் ஸ்டீவன் சுமித் அந்த அணியை வழிநடத்தினார். மேலும் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், அலெக்ஸ் கேரி மற்றும் புதுமுக பவுலர் ஸ்பென்சர் ஜான்சன் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி சுப்மன் கில்லும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் பந்தையே பவுண்டரிக்கு ஓடவிட்ட ருதுராஜ் 8 ரன்னில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு கில்லுடன், ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். குறைந்த பவுண்டரி தூரம், பேட்டிங்குக்கு சொர்க்கமான ஆடுகளம் ஆகியவற்றை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட கில்லும், அய்யரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கி துரிதமாக ரன் சேகரித்தனர். 9.5 ஓவரில் சிறிது நேரம் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 12.5 ஓவர்களில் இந்தியா 100-ஐ தொட்டது.

ஸ்ரேயாஸ், கில் சதம் தொடர்ந்து நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது 3-வது சதத்தை ருசித்தார்.  அணியின் ஸ்கோர் 216-ஆக உயர்ந்தபோது, ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் (90 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். சுப்மன் கில் 104 ரன்னில் (97 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

இஷான் கிஷன் 31 ரன்னில் ஜம்பாவின் சுழலில் சிக்கினார்.  இதைத் தொடர்ந்து ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி போட்டார். இதன் பிறகு ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. சூர்யகுமார், ஆஸ்திரேலிய பந்துவீச்சை பின்னியெடுத்தார். கேமரூன் கிரீனின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை தெறிக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அவர் 24 பந்துகளில் 50 ரன்களை எட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஸ்கோர் 355-ஐ எட்டிய போது ராகுல் 52 ரன்னில் (38 பந்து, 3 சிக்சர், 3 பவுண்டரி) கிரீன் பந்துவீச்சில் போல்டு ஆனார். சூர்யகுமார் களத்தில் நின்றதால் ஸ்கோர் 400-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மைல்கல்லை அடைய கடைசி 3 பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், 3 ரன் மட்டுமே எடுத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் ‘மெகா’ ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்களுடனும் (37 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), ஜடேஜா 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் ‘2 விக்கெட் எடுத்தார். அவரது பந்து வீச்சில் மேத்யூ ஷார்ட் (9 ரன்), அடுத்து வந்த கேப்டன் சுமித் (0) ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா நெருக்கடி வளையத்தில் சிக்கியது. அந்த அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் 1¼ மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி ஆஸ்திரேலியாவுக்கு 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னரும், மார்னஸ் லபுஸ்சேனும் சிறிது நேரம் போராடினர். லபுஸ்சேனும் (27 ரன்), வார்னரும் (53 ரன், 39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வினின் சுழல் வலையில் சிக்க, அதன் பிறகு ஆஸ்திரேலியா முழுமையாக தடம் புரண்டது. ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்களுடன் மோசமான நிலையில் பரிதவித்தது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சீன் அப்போட்டும், ஹேசில்வுட்டும் ஆச்சரியப்படும் வகையில்  இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இவர்கள் கவுரவமாக ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினர். சிக்சர் மழை பொழிந்த அப்போட் 29 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஒரு வழியாக ஹேசில்வுட் 23 ரன்னிலும், சீன் அப்போட் 54 ரன்னிலும் (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) போல்டு ஆனார்கள்.

முடிவில் ஆஸ்திரேலியா 28.2 ஓவர்களில் 217 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றதால், ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் 117 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் பிரச்சினை இல்லை. உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு இந்தியா ‘நம்பர் ஒன்’ அணியாக நுழைகிறது. பாகிஸ்தான் 115 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 110 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்தியா.  ஆஸ்திரேலியா மோதும் 3வது போட்டி வரும் 27ம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *