சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே புலிசாத்து முனியப்பன் கோவிலை அடுத்த வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் எரிந்து கொண்டிருப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கிடைத்தது. 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அங்கு எரிந்து கொண்டிருந்த இளம்பெண் உடலை பார்த்தவுடன் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதற்குள் அந்த பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். உடல் கருகி இறந்து கிடந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவரது முகம் அடையாளம் தெரியாத வகையில் எரிந்து காணப்பட்டது. உடனே போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் ( 24) என்பவர் தன்னுடைய தாயாருடன் வந்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்… முரளிகிருஷ்ணன் பெங்களூருவில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், ஜலகண்டாபுரம் கம்போஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த கேசவராஜி மகள் கோகிலவாணி (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெங்களூருவில் உள்ள தாய்வழி பாட்டி வீட்டுக்கு வந்து செல்லும் போது கோகிலவாணிக்கும், முரளிகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. இருவரும் உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வீட்டுக்கு தெரியாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அலைபாயுதே சினிமா பாணியில் அவரவர் வீட்டில் இருந்துள்ளனர். கோகிலவாணி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். முரளிகிருஷ்ணனுக்கும், கோகிலவாணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலையில் சேலம் 5 ரோட்டில் கோகிலவாணியை, முரளிகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் பேசி முடிவெடுத்து கொள்ளலாம் என்று முரளிகிருஷ்ணன் கூறியுள்ளார். பின்னர் கோகிலவாணியை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஜோடுகுளி அருகே புலிசாத்து முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். பெட்ரோலை ஊற்றி தீவைப்பு அங்கு பேசி கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் ஸ்குரு கழட்ட பயன்படுத்தும் கருவியை கொண்டு கோகிலவாணி கழுத்தில் அவர் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்படி இருந்தும் ஆத்திரம் தீராத முரளிகிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை கோகிலவாணி மீது ஊற்றினார். பின்னர் தீ வைத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்று விட்டார். நடந்த சம்பவத்தை அறிந்த முரளிகிருஷ்ணனை, அவருடைய தாயார் அழைத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து சரண் அடைந்துள்ளார். தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளிகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.