திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா, தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் விழா, முன்னாள் மாணவர்களின் சங்கம விழா ஆகிய முப்பெரும் விழா நாளை( ஞாயிறு) காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கு முனைவர் முஸ்தபா கமால் தலைமை தாங்குகிறார். சங்க பொதுச்செயலாளர் செந்தில் ராஜன் வரவேற்கிறார்.
கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி, முன்னாள் மாணவர்கள் பத்மஸ்ரீ சுப்புராமன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, தொழிலதிபர் நாச்சிக்குறிச்சி சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சோம. செந்தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
தந்தை பெரியார் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளில் பெற்றோரை இழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழாவில் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற முன்னாள் மாணவர்கள், தா.பழூர் ஆசிரியர் குணசேகரன், மருங்காபுரி ஆசிரியர் ராஜசேகரன், பாடாலூர் தலைமை ஆசிரியை மீனா மாணிக்கம், காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் ஷேக் அப்துல்லா, மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவி பி. யாழினி, என்சிசி துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற மாணவர் லெட்சுமணன் ஆகியோர் விழாவில் பாராட்டி கவுரவிக்கப்படுகிறார்கள்.
விழாவில் நடிகை லெட்சுமி சிவசந்திரன் சிறப்புரையாற்றுகிறார். முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலர் திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சியுரை ஆற்றுகிறார்.
மாலை 3 .15 மணிக்கு டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, பழனி குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறும். முடிவில் முனைவர் செல்லப்பா நன்றி கூறுகிறார். மாலை 6 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்குமாறு திருச்சி சிவா எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.