Skip to content
Home » வைகுண்ட ஏகாதசி…ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராம மக்கள்…

வைகுண்ட ஏகாதசி…ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராம மக்கள்…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொக்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம்.

இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு இராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்ரி சரித்திர நாடகங்கள் நடத்தப்படுகிறது.

இந்த நாடகங்களுக்கு தேவையான கதாப்பாத்திரங்களுக்குரிய கலைஞர்களாக கிராம மக்களே நடித்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண் கதாபாத்திரங்களை ஆண்கள் ஏற்று நடிக்கின்றனர்.

சினிமா, டி.வி என்று வீட்டுக்குள்ளேயே மக்களை முடக்கிப் போடும் தொழில் நுட்ப ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்திலும், சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 1, 2 மற்றும் நாளை 3ம் தேதி 3 நாட்களும் ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கொல்லாங்கரை கிராம மக்கள் கூறியாதாவது: எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம்.

இதில் எங்களது கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர். தொலைக்காட்சியில் சீரியல்கள் இருந்தாலும் கிராம மக்கள் அன்றைய தினம் சரித்திர நாடகங்களை பார்த்து, ரசித்து வருகின்றனர். இதில் பொதுமக்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்தாலும், நாடகம் நடத்துவதை பாரம்பரியமாக தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *