திருச்சி மணப்பாறை பகுதியை சுற்றியுள்ள அசைவ உணவு விற்பனை செய்யும் சுமார் 12 கடைகள் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஷண்முகம், செல்வராஜ், மகாதேவன், இப்ராஹிம், ரெங்கநாதன், வடிவேல் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு செய்ததில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் புற்றுநோய் வரவழைக்கக்கூடிய அதிக நிறமி சேர்க்கப்பட்ட அசைவ உணவுகள் மற்றும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத
சுமார் 126 கிலோ உணவுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும், ஐந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
மேலும் 5 கடைகளுக்கு தலா 3000 வீதம் 15000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கு போடுவதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கிருந்த ஒரு உணவகத்தின் சமையலறை மிகவும் அசுத்தமான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டு அந்த உணவகம் தற்காலிகமாக உணவு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு அதனை சரிசெய்ய பிரிவு 32 நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது..
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றையதினம் மீதமாகும் சமைத்த இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது, ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியோ அல்லது வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு 9944959595 ,9585959595 புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.