Skip to content
Home » 23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

  • by Authour

புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. 9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார்.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.

தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர். இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். புதுவை சட்டசபை 23 நிமிடத்தில் முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *