Skip to content
Home » மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை

மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை

  • by Senthil

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு – அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை.

இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி – ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள்.  2016-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை – மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.பி.கள் அனைவரும் சேர்ந்து இதற்காக குரல் கொடுத்தார்கள்.

’33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை. வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டு வரவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?. சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள் ஆகும்.

சாதி வேறுபாடுகள் அற்ற சமத்துவத்தை உருவாக்கவே சமூகநீதிக் கோட்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது ஆகும். அதற்கு முதலில் அவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இதையே தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமையும் போதெல்லாம் செயல்படுத்திக் காட்டியும் வருகிறது.

. 1996-ம் ஆண்டு தி.மு.க அங்கம் வகித்த ஒன்றிய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்டது. 2005-ஆம் ஆண்டும் திமுக இடம்பெற்ற ஒன்றிய அரசு இதனைத் தாக்கல் செய்தது. முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பா.ஜ.க எதிர்த்தது. பா.ஜ.க பெண் உறுப்பினரான உமா பாரதியே இதனைக் கடுமையாக எதிர்த்தார். கடந்த காலத்தில் இதை எதிர்த்தவர்களில் தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கியமானவர்.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010-ம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் சில கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது.

2014-ம் ஆண்டும், 2019-ஆம் ஆண்டும் நடந்த தேர்தல்களில் பெரும்பானையைப் பெற்றது பா.ஜ.க அரசு. நினைத்திருந்தால் அவர்கள் அதனை உடனடியாக நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 2017-ம் ஆண்டு தி.மு.க சார்பில் மகளிரணிச் செயலாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில்oல்லியில் பேரணி நடத்தினோம். 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நடந்த தி.மு.க. எம்.பி.கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகளாக அதிக பெரும்பான்மை உள்ள பா.ஜ.க. அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-ன் படி 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 48-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறார்கள். நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மூலமாக இதனைச் சரி செய்ய முடியும். அந்த வகையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தார்.

நாடாளுமன்ற – சட்டமன்றங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். இவர்கள் இருவரது சாதனைகளும் இப்போது நினைவு கூரப்பட வேண்டியவை ஆகும். காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புகாகச் செய்தாலும், இப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், ஒன்றிய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளாமல், அதன் நியாயத்தை பரிசீலிக்குமாறு ஒன்றிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் நடத்தாத ஒரே நாடு இந்தியா. எப்போது நடைபெறும் என்ற உத்தரவாதத்தையும் இதுவரை பா.ஜ.க. அரசு தரவில்லை. எப்போது நடைபெறும் என்று தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க.வால் அரங்கேற்றப்படுகிறது. தமிழ்நாட்டின் மீது – தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை (delimitation) உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!