மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கண்காட்சி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பாமல், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் புகார்தாரரிடமே கொடுத்து தமிழக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு நேரில் செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த மனுவினை வாங்கிக்கொண்ட சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை, கண்காட்சிப் பிரிவு அதிகாரி அன்பரசு, இந்தக் கண்காட்சி நடத்த அனுமதி வழங்க ரூ.15,000/- லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்கத் தயாராக இல்லாததால் மாணிக்கவாசகம் சென்னை ஊழல் தடுப்புப் பிரிவை அணுகி புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விஜிலன்ஸ் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மாணிக்கவாசகத்திடம் இருந்து அன்பரசு உத்தரவின் பேரில் அலுவலக உதவியாளர் பாலாஜி, ரூ.15,000ஐ லஞ்சமாகப் பெற்று அன்பரசிடம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த விஜிலன்ஸ் போலீசார் அன்பரசன் மற்றும் பாலாஜியை கைது செய்தனர். மேலும் அன்பரசனிடம் இருந்த கவர்களில் இருந்த கணக்கில் வராத ரூ.90,000 யையும் விஜிலன்ஸ் போலீசார் கைப்பற்றினர்.
லஞ்சம் வாங்கியதாகத் தலைமைச் செயலகத்திலேயே அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.