Skip to content
Home » திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

திருச்சி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம்… பாதுகாப்பு பணிக்கு 1850 போலீசார்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவேரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டும், சட்டம் ஒழுங்கை பேணிகாக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதன்படி, திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வின்போது, விழா அமைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து திருச்சி மாநகர காவல் சரகங்களில் விழா அமைப்பாளர்கள் மற்றும் அதனை சார்ந்த நிர்வாகிகள் உட்பட முக்கிய அமைப்பை சார்ந்த நபர்களுடன் ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திடவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோசங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது எனவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரத்தில் 20.09.23-ந் தேதி நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு வரைவு திட்டத்தின்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், ஒரு கூடுதல் காவல் துணை ஆணையர், 9 காவல் உதவி ஆணையர்கள், 37 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட மொத்தம் 1850 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். ஊர்வலத்தின் போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைகுரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் விநாயகர் ஊர்வலம் நடைபெறும் 20.09.23-ந்தேதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்காக, வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறையில் விரிவான பாதுகாப்பு வரைவு திட்டத்தின்படி நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் சிறப்பான முறையில் பாதுகாப்பு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், எவ்வித இடையூறும் இன்றி சுமூகமாகவும், அமைதியாகவும், பாதுகாப்பாகவும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்வுகள் நடைபெற அனைத்து சமுதாய பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *