நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
அவைத்தலைவர் அவர்களே! 1978 ல் ராஜ்யசபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்த எனக்கு இது ஒரு நீண்ட பயணம்.
இப்போது ராஜ்யசபாவில் நான் 4வது முறையாக பதவியேற்று இருக்கிறேன். மேல்சபை உறுப்பினராக இருந்ததைத் தவிர, 12வது மக்களவையிலும், 13வது மக்களவையிலும் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த பெருமை எனக்கு கிடைத்தது.கடந்த 75 ஆண்டுகளில் நாடு ஏராளமான சூறாவளிகளையும், ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொண்டது.
ஆனால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னவென்றால், ஏன் ‘பாரத்’ என்று பெயர் மாற்றப்பட்டது என்பதுதான். அண்மையில் ‘ஜி 20 மாநாடு’ நடந்தது. அம்மாநாட்டில் நம்முடைய பிரதமருக்கு முன்பு பாரத் என்ற பெயர் பலகை வைத்திருந்தார்கள். ‘இந்தியா’ என்ற பெயர் இல்லை. எனவே நாம் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. எனவே நீங்கள் அதை ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என்று அழையுங்கள். அப்படி அழைக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
பாரதம் எதிலிருந்து, எங்கிருந்து வந்தது? உபநிஷதங்களில் இருந்து, சனாதனம் மற்றும் இந்து ராஷ்டிரத்திலிருந்து வந்தது. எனவே இந்த நாட்டை இந்து ராஷ்டிராவாக மாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் நான் அவர்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன், நீங்கள் எங்கள் பகுதிக்குள் நுழைய முடியவில்லை, சந்திர குப்த மௌரியர்கள் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியவில்லை. மொகலாயர்கள் நுழைய முடியவில்லை. வடக்கிருந்து வந்தவர்களால் தமிழ்நாட்டிற்குள் நுழைய இயலவில்லை.
நாங்கள் கங்கைக் கரையில் போரில் வென்றோம். நாங்கள் இமயமலையில் வெற்றிக் கொடி நாட்டினோம்.அவைத்தலைவர் அவர்களே! நான் இதை சுட்டிக்காட்ட மிகவும் வருந்துகிறேன், இந்தியப் பிரதமர் இந்தியாவிற்குப் பதிலாக பாரத் என்று வைக்கிறார், எனவே இனிமேல் நாம் இந்தியாவை பாரத் என்று அழைக்க வேண்டும். இந்தியாவை கண்டு பயப்படுவது ஏன்? இந்தியா கூட்டணி உருவானது. அது அவர்களை அச்சுறுத்துகிறது. இந்தியா அவர்களை அச்சுறுத்தியது. எனவே பாரத் என்று பெயர் மாற்ற முயற்சிக்கிறார்கள்.
அவைத்தலைவர் அவர்களே! நான் அதிக நேரம் எடுக்க விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் மூன்று நிமிட நேரம் மட்டும் தந்து இருக்கிறீர்கள்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அம்பேத்கர் உருவப்படம் வைக்க கோரிக்கை விடுத்தேன்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்த அனுமதி வேண்டி கோரிக்கை எழுப்பினேன்.
அவைத்தலைவர் அவர்களே! மதச்சார்பின்மை அச்சுறுத்தலில் உள்ளது. முஸ்லிம்கள் அச்சுறுத்தலில் உள்ளனர். அவர்களை அச்சுறுத்தும் சனாதன சக்திகள், ‘முஸ்லிம்களே, நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறுவதால் அவர்கள் பயப்படுகிறார்கள்.
இது உங்கள் நாடு அல்ல. இது இந்துத்துவவாதிகளின் குரல். வரும் நாட்களில் நாடு எரிமலையாக மாறும், குறிப்பிட்ட நாளில், அது சோவியத் யூனியனாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் யூனியனில் என்ன நடக்கிறது? அது இந்தியாவில் நடக்கும். பல மாநிலங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. அதனால்தான் நான் ஐக்கிய இந்திய ஒன்றியம் என்று குறிப்பிடுகிறேன்.
இல்லையெனில் சுதந்திர தின நூற்றாண்டு விழாவை கொண்டாட இந்தியா இருக்காது. 2047 ல் இந்தியாவில் மாநிலங்கள் இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.