Skip to content
Home » தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

தஞ்சை அருகே சூறாவளி காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்..

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.

இதில் பெரும்பாலான வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் வடுகக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. சூறாவளி காற்று தொடர்ந்து வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த வாழை மரங்கள் இப்படி சேதம் ஆகிவிட்டதே என எண்ணி வேதனை அடைந்தனர். பல விவசாயிகள் சாய்ந்த வாழை மரத்தை பார்த்து அழுதது பலரையும் வேதனைப்பட வைத்தது.

இது குறித்து வாழை விவசாயிகள் தரப்பில் கூறுகையில், எங்கள் பகுதியில் வாழை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும். தற்போது வாழை மரங்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு அறுவடை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் முதலீடு தொகை எடுக்கும் நேரத்தில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதுபோன்று பருவ மழை பெய்யும் காலங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இது போன்று நடைபெறுவதனால் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்வது போல வாழைக்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும். மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு இழப்பீடு அறிக்கை தாக்கல் செய்த அரசுக்கு வழங்க வேண்டும். உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!