Skip to content
Home » தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

  • by Senthil

கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் லோடு ஆட்டோவில் புதுக்கோட்டையிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

சோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது, இவை, இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. சோளத்தில் வைட்டமின் ஏ உள்ளது, இது கண்பார்வையின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சோளத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களிலிருந்து சோளம் மக்களை பாதுகாக்கிறது. கரோட்டின் உள்ளதால் சோளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுகளில் புரத சத்து அதிகம் உள்ள சோளத்திற்கு முக்கிய பங்குண்டு. இவற்றில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாட்டுச்சோளம் வறட்சி தாங்கி வளரும் தன்மை உடையதால் வறட்சியான இடங்களிலும் விதைக்கப்படுகின்றன. தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியில் விளையும் நாட்டுச்சோளத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி லோடு ஆட்டோவில் ஏற்றி தஞ்சை பகுதி கிராமங்களில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். பிஞ்சாக விற்பனை செய்யப்படும் இந்த நாட்டுச்சோளத்தை மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர்.

கிலோ ரூ.25க்கு இந்த நாட்டுச்சோளம் விற்பனை செய்யப்படுகிறது. 4 சோளங்கள் ஒரு கிலோ எடையில் உள்ளது. பிஞ்சாகவும், நேரடியாக வீடு தேடி வரும் இந்த நாட்டுச்சோளத்தை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தஞ்சை அருகே 8.கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தரக்குடி, பூதலூர் என்று பரவலாக அனைத்து கிராமப்பகுதிகளிலும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!