நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டமாக இன்று இங்கு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:
ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 உச்சிமாநாடு பதில் அளித்துள்ளது. உலக நாடுகள் நம் பாரத நாட்டை நண்பனாக பார்க்கின்றன. சந்திரயான் 3 வெற்றி இந்தியரின் பெருமை.சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்துள்ளது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தை கோவில் போல உறுப்பினர்கள் கருதி வந்ததை நாம் பார்த்துள்ளோம். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இந்த அவை கட்டி காத்தது. கொரோனா காலத்திலும் இந்த அவை முடங்கவில்லை. இந்த அவையின் தாக்கத்தால் நமது வலிமையை உலகுக்கு காட்டி உள்ளோம். நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை நாட்டின் வளர்ச்சியை நிலை நாட்ட உழைத்தனர். சாதாரண மக்களின் குரலை இங்கு அவர்கள் எதிரொலிக்க செய்தனர். 3 பிரதமர்கள் பதவியில் இருந்தபோது உயிரிழந்துள்ளனர். இது சோகமான தருணம்.
நமக்கு வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி . தோட்ட ஊழியர்கள் உள்பட அனைத்து நாடாளுமன்ற பணியாளர்களுக்கும் நன்றி. அவர்கள் உழைப்பு பாராட்டத்தக்கது. நாடாளுமன்ற தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்கம். இந்த அவையின் நடவடிக்கைகளை நொடிக்கு நொடி மக்களுக்கு தெரிவித்த ஊடகங்களுக்கு நன்றி. அவர்கள் செய்திகளை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சி பற்றியும் மக்களுக்கு எடுத்து சென்றனர். ஊடகங்களின் பணி பாராட்டத்தக்கது.
(நாடாளுமன்றத்தில்நேரு ஆற்றிய டிரைஸ்ட் வித் டிஸ்டினி உரையையை நினைவு கூர்ந்தும் பிரதமர் பாராட்டினார். )இந்திய ஜனநாயகத்திற்கு அம்பேத்கர் மிகப்பெரிய பங்களிப்பை தந்தார். நேரு அமைச்சரவையில் அவர் சிறப்பாக பணியாற்றினார். பசுமை புரட்சிக்கான திட்டத்தை வகுத்தவர் லால்பகதூர் சாஸ்திரி. வங்க தேச போர் வெற்றிக்கு வித்திட்ட இந்திரா காந்தி, அந்த பிரகடனத்தை இந்த அவையில் தான் வாசித்தார். பொருளாதார சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க பாடுபட்டது நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி.
ஒரே நாடு , ஒரே வரி என்பதை ஏற்றுக்கொண்டது இந்த நாடு. முன்னேறிய வகுப்பில் ஏழைகளுக்கான 10 % இட ஒதுக்கீடு இந்த அவையில் தான் கொண்டுவரப்பட்டது. வேற்றுைமயில் ஒற்றுமை என்பது போல பல்வேறு சிறிய கட்சிகளின் உறுழு்பினர்கள் இங்கு உள்ளனர். வாஜ்பாய் ஆட்சியில் 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அனைவரும் கொண்டாடினார்கள். 400 உறுப்பினர்களுடன் ஆட்சி செய்த கட்சி இன்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.
உங்கள் ஒத்துழைப்போடு புதிய நாடாளுமன்றத்திற்கு செல்லும்போது அங்கும் சிறப்பாக பணியாற்றுவோம் என நம்புகிறேன். ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளும்போது அரசியல் கலக்காமல் இருக்க வேண்டும். அருமையான நினைவுகளோடு அந்த அவையில் உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வரலாறு, வருங்காலத்தையும் ஒன்றிணைத்து பார்க்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசி னார். அதைத்தொடர்ந்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.